காதலும் திருமணங்களும் ஒரு கலாச்சாரப் பிரிவுக்குள்ளேயே நிகழும்போது பெரிதாகப் பிரச்சனை இல்லை. ஆனால் இரண்டு வெவ்வேறு கலாச்சாரங்களைச் சார்ந்த ஆணும் பெண்ணும் காதலிக்கும் போது, திருமணத் திற்கு முயற்சிக்கும் போது அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் எதிர்பாராததாக இருக்கும். மதம், மொழி, இனம், நிறம் என்ற வேலிகளைக் கடக்கத் துடிக்கும் இரண்டு காதல் மனங்களைப் பற்றிய அற்புதமான சினிமா பென் அண்டு ஆரா (Ben & Ara) அமெரிக்காவின் ஜியார்ஜியா மாநிலத்தில் நிகழ்வதான கதை. பென் பி.ஹெச்.டி. மாணவன். வெள்ளை அமெரிக்கன். கட்டுப் பாடற்ற அமெரிக்க கலாச்சாரத்துக்குச் சொந்தக்காரன். அவனுடைய ஆய்வுக் கட்டுரை சரியில்லை என தொடர்ந்து நிராகரிக்கப்படுவதால் ஏழாவது ஆண்டாக மாணவனாகத் தொடர்கிறான். இந்த ஆண்டு அவனது ஆய்வுக்கட்டுரை தேர்வாகாவிட்டால் பி.ஹெச்.டி. தேர்ச்சி மறுக்கப்படும். ஏழாண்டுகள் வீண். “மதங்களும் தத்துவமும்” என்பது அவனது ஆராய்ச்சித் தலைப்பு. மற்றொரு ஆராய்ச்சி பட்டப் படிப்பு மாணவி ஆராவைத் தற்செயலாக ஒரு கண்காட்சியில் சந்திக்கிறான். ஆரா ஆப்பிரிக்காவின் கேமரூன் நாட்டைப் பூர்விகமாகக் கொண்டவள். கருப்பி. கட்டுப்பாடான இஸ்லாமியக் குடும்பத்துப் பெண். ஒருவருக்கொருவர் நன்கு அறிமுகமான பின் தனது ஆராய்ச்சிக்கட்டுரையை எழுத உதவும்படி ஆராவிடம், பென் கேட்கிறான். மதங்கள், தத்துவங்கள் குறித்து இருவரும் ஆழமாக விவாதிக்கிறார்கள்.
கிறித்தவனான பென் கடவுள் மற்றும் மதத்தில் பெரிய நம்பிக்கையாளன் இல்லை. மத நம்பிக்கையுடைய ஆரா அல்லாவை போற்றி வணங்குபவள். எனினும் வேற்றுமைகளைக் கடந்து நட்பாகி, பின் இருவருக்குமிடையே காதல் மலர்கிறது. பென்னோடு முதன்முறையாக கேளிக்கை மையங்களுக்குப் போகிறாள் ஆரா. பென்னின் இளம் ஆண், பெண் நண்பர்களை விருந்து ஒன்றின்போது சந்திக்கிறாள் ஆரா. அமெரிக்க இளைஞர்களுக்கிருக்கும் முழுமையான சுதந்திரத்தை ஆரா மேலும் நன்கு உணர்கிறாள். மது, புகை பிடித்தல், சம்மதத்துடன் உடலுறவு என்ற அமெரிக்க இளைஞர்களின் சுதந்திரத்தை வியப்போடு நோக்குகிறாள். மதம், இனம், மொழி, நிறம், கடவுள் நம்பிக்கை என்ற எல்லைகளை மீறிய அவர்களது காதல், உடலுறவு வரை போகிறது. ஆராவின் தாயார் ஆராவுக்கு வேறொரு மாப்பிள்ளை பார்க்க அதை ஏற்கனவே நிராகரித்திருக்கிறாள் ஆரா. மதக்கட்டுப்பாடை மீறிய காதலும் அதன் சுகமும் ஆராவுக்கு இனிமையாயிருக்கிறது. ஆனால் பென் உடனான உடலுறவுக்குப் பின் மிகுந்த குழப்படைகிறாள் ஆரா. ஏனெனில் இது “மத விரோதச் செயல்”. தவறு செய்து விட்டோமோ? எனக் கலங்கு கிறாள். தாயிடம் நடந்ததைக் கூறுகிறாள். தாய் இதனை கடுமையாகக் கண்டிக்கிறாள். வெளியில் தெரிந்தால் மதநீக்கம் செய்யப்படுவதோடு, இனத்தாரால் ஒதுக்கப்பட்டுவிடுவோம் எனப் பதறுகிறாள்.
இதோடு நிறுத்திக்கொள் நான் பார்த்து வைத்திருக்கிற மாப்பிள்ளையைத் திருமணம் செய்துகொள் என வற்புறுத்துகிறாள். பென் ஏற்கனவே காப்ரீயல் என்ற பெண்ணோடு நட்பிலிருக்கிறான். இதை ஆராவிடமும் தெரிவித்திருக்கிறான். உடலுறவைத் தொடர்ந்து ஆரா கர்ப்பமுறுகிறாள். இதனை பென்னிடம் தெரிவிக்கிறாள். பென் இதனை எதிர்பார்க்கவில்லை. மன்னிப்புக் கேட்கிறான். மேற்கொண்டு என்ன செய்வது என்று முடிவெடுக்க தாயிடம் சொல்லிவிட்டு பென்னோடு வந்து தங்குகிறாள் ஆரா. ஒரு நாள் காப்ரியேல் வந்து பென்னிடம் உரிமையோடு நடந்துகொள்வதைப் பார்க்கும் ஆரா அங்கிருந்து கோபத்தோடு வெளியேறுகிறாள். கர்ப்பத்தைக் கலைத்துவிட்டு அம்மா பார்த்து வைத்திருக்கும் மாப்பிள்ளையைத் திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கிறாள். ஒரு நாள் காப்ரியேல் பென்னிடம் வந்து தான் கர்ப்பமாக இருப்பதாகச் சொல்கிறாள். அது எப்படி? எனக் கேட்கிறான் பென். மற்ற ஆண்களோடு நான் பாதுகாப்பாய் உடலுறவு கொண்டேன். உன்னிடம் அப்படி இல்லை. எனவே எனது கர்ப்பத்துக்குக் காரணம் நீதான் என்கிறாள். பென் உடைந்து போகிறான்.
ஆராவையே மனப்பூர்வமாகக் காதலிப்பதாகக் கூறுகிறான். ஐரோப்பிய, அமெரிக்க கலாச்சாரத்தோடு கலக்க விரும்புகிற முதல் தலைமுறை அயல்நாட்டவர்க்கு தங்கள் கலாச்சாரம் பெரிய தடையாக இருக்கிறது. ஒன்றிரண்டு தலைமுறை அதைக் கடந்து வந்துவிட்டால் பின்னர் வரும் தலைமுறையினர் அதனை ஏற்றுக்கொள்ளவும், பின்பற்றவும் மனதளவில் தயாராகிவிடுகின்றனர். இதை மேற்கு ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் குடியேறியுள்ள அயல்நாட்டவரின் வாழ்க்கையில் நன்கு பார்க்க முடியும். மக்களிடமிருந்து நன்கொடை பெற்று சுயாதீன சினிமாவாக இதனை உருவாக்கியிருக்கிறார்கள். மிக இயல்பான கதை. இயல்பான கதாபாத்திரங்கள். எது சரி, எது தவறு? என்று இளைஞர்களே தங்கள் அனுபவத்திலிருந்து முடிவெடுக்கிறார்கள். ஏனெனில் வாழ்க்கை நெடியது; இனியது. நெஜஸ்ட் லிக்கி என்ற நைஜீரியப் பெண் இயக்குநர் திறமையாக இயக்கியிருக்கிறார்.